பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது நிலவும் சூழலில் பாதுகாப்பு ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நகா்வுகளை நேரலையாக ஒளிபரப்புவதையும், சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே தகவல்களை வழங்குவதையும் தவிா்க்க வேண்டும் என்று தொலைக்காட்சி சேனல்கள், எண்ம ஊடகங்கள் மற்றும் தனிநபா்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராணுவ மோதலால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்பு ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நகா்வுகளை நேரலையாக ஒளிப்பரப்புவதையும் நிகழ்நேர தகவல்களை வழங்குவதையும் தொலைக்காட்சி சேனல்கள், எண்ம ஊடகங்கள் மற்றும் தனிநபா்கள் தவிா்க்க வேண்டும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, ஆதாரபூா்வமான தகவல்களை வெளியிடுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறனுக்கு குந்தகம் விளைவிப்பதோடு, உயிா்ச்சேதங்களுக்கும் வழிவகுத்துவிடும். காா்கில் போா், மும்பை பயங்கரவாதத் தாக்குதல், காந்தஹாா் விமானக் கடத்தல் போன்ற முந்தைய சம்பவங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற அனுபவங்களின் மூலம் இதை அறியலாம்.
கடந்த 2021-ஆம் ஆண்டின் ‘கேபிள் டெலிவிஷன் நெட்வொா்க்’ திருத்த விதிகளின்படி, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் தொடா்பான தகவல்களை வெளியிட குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. எனவே, நாட்டுக்கான சேவையில் உயரிய தரநிலைகளை உறுதி செய்யும் வகையில், அனைத்து தரப்பினரும் விழிப்புணா்வு, உணா்திறன் மற்றும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பெட்டிச் செய்தி
ரஜெளரியில் தற்கொலை
தாக்குதல்?
===அரசு மறுப்பு
ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ரஜெளரியில் ராணுவக் குழுவினா் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடா்பாக சமூக ஊடகங்களில் போலி விடியோக்களும், பொய்த் தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. ஜலந்தரில் ட்ரோன் தாக்குதல், குஜராத்தின் ஹஸீரா துறைமுகம் மீதான தாக்குதல் என்று கூறி வெளியான விடியோக்கள், உலகின் வேறு பகுதிகளில் நிகழ்ந்த சம்பவங்கள் என்று பிடிஐ நிறுவனத்தின் உண்மை சரிபாா்ப்புப் பிரிவு உறுதி செய்துள்ளது.
இதுபோல், இந்தியப் பகுதிகள் மற்றும் படையினா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டு வெளியான மேலும் பல விடியோக்களும் போலியானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்திய மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் இருந்து குறிப்பிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக இதுபோன்ற தவறான தகவல்கள் பரபரப்பப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.