'பாப்பாவை விட்டு நகர முடியாது; சரியான வீடுகூட.!' - கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்தின் நிலை
பல ஆயிரக்கணக்கான பாம்புகளின் உயிர்களையும், அதன் மூலம் மனிதர்களின் உயிர்களையும் பாதுகாத்து வந்த, கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமார் நாகப்பாம்பு கடித்து கடந்த மார்ச் 19-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு சரண்யா என்ற மனைவி, அனாமிகா, மைனிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகள் மாற்றுத்திறனாளி ஆவார். ஏற்கெனவே பொருளாதாரத்தில் தடுமாறி வந்த சந்தோஷின் குடும்பம் தற்போது மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

அவர்களின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள வடவள்ளி பகுதியில் உள்ள சந்தோஷின் வீட்டுக்கு சென்றோம். நீண்ட ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய லைன் வீட்டின் ஒரு பகுதியில் தான் அவர்களின் வீடு உள்ளது. துரு பிடித்து, இத்து போய் கீழே சரிந்த கேட்டை மீண்டும் கட்டி தொங்க விட்டிருந்தனர்.
மீண்டு வருவார் என்று எதிர்பார்த்தோம்!
மனிதர்கள் இல்லை என்றால் பாழடைந்த வீடு என்ற சொல்வதற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. ஒரு தட்டு தட்டினால் கையோடு வருமளவுக்கு அவர்கள் வீட்டு கதவு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நம்மிடம் பேசிய சரண்யா, “இதற்கு முன்பும் என் கணவரை பலமுறை பாம்பு கடித்துள்ளது. கடந்தாண்டு கண்ணாடி விரியன் பாம்பு கடித்து சுமார் 25 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதேபோல இந்தமுறையும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால், அது நடைபெறவில்லை. கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆகிவிட்டன. சந்தோஷ் இறப்பதற்கு முன்பு மாவுக் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அவரும், நானும் மாற்றி மாற்றி பெரிய பாப்பாவை பார்த்துக் கொள்வோம். இப்போது பாப்பாவை விட்டு எங்கும் நகர முடியாது. எந்த வேலைக்கு சென்றாலும் காலை சென்றால் மாலை தான் திரும்ப முடியும். வீட்டில் இருந்தே ஏதாவது செய்யலாம் என்று அருகில் தையல் வகுப்புக்கு சென்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அப்போது பெரியவளை, சின்ன பாப்பா பார்த்துக் கொள்வாள். சில சமயம் அவள் விளையாட சென்றுவிடுவாள். அந்த நேரத்தில் பெரிய பாப்பாவை வீட்டில் வைத்து பூட்டி செல்வேன். அப்போதும் பாப்பா கதவை தட்டி தட்டி.. கதவில் உள்ள சிறிய சந்து வழியாக ரோட்டுக்கு சென்றுவிடுவாள். எங்கள் வீட்டுக்கு முன்பே தண்ணீர் தொட்டி உள்ளது. அதன் காரணமாக அவளுடன் யாராவது இருந்தே ஆக வேண்டும். எங்கள் காம்பவுண்டில் மொத்தம் 5 வீடுகள் உள்ளன.

5 வீடுகளுக்கும் பொதுவாக ஒரு கழிப்பறை தான் உள்ளது. இந்த வீட்டுக்கு ரூ.3,000 வாடகை. கணவர் இறந்ததால் கடந்த 2 மாதங்களாக வீட்டு வாடகை வாங்கவில்லை. தற்போது இந்த காம்பவுண்டை மொத்தமாக இடித்துவிட்டு கட்டப் போகிறார்கள். அதனால் இந்த மே மாத கடைசிக்குள் வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளனர்.
வீடு கிடைத்துவிட்டால்..!
பாம்பு பிடிப்பது தொடர்பாக சந்தோஷ் நிறைய பேருக்கு பயிற்சி அளித்துள்ளார். அவர் உயிரிழந்த பிறகும் கூட நிறைய பேர் அவரது எண்ணுக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. அப்படி வரும் அழைப்புகளை அவரிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு அனுப்புகிறேன். அவர்கள் பாம்பு பிடிப்பதற்காக பெறும் கட்டணத்தின் ஒரு பகுதியை எங்களுக்கு தருகிறார்கள். எங்கள் 2 குடும்பத்தில் இருந்து யாரும் உதவி செய்யும் நிலையில் இல்லை. கணவர் உயிரிழந்த பிறகு சிலர் செய்யும் உதவிகளை வைத்து தற்போது ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

மேலும் சிலர் உதவி செய்வதாக கூறியுள்ளனர். அரசுத் தரப்பில் ஏதாவது வேலை வாய்ப்பு வாங்கித் தருகிறோம் என்று கூறினர். வேலைக்கு சென்றாலும் வெளியில் வாடகைக்கு வீடு பார்க்க வேண்டும். மேலும் பாப்பாவை விட்டு வேலைக்கு செல்வது கடினம். அதனால் அரசிடம் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் இலவச வீடு வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். வீடு கிடைத்துவிட்டால் மாதம் ரூ.5,000 வருமானம் வந்தாலே குடும்பத்தை ஓட்டி விடுவேன்.
எனக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதற்கு தேவையான மருந்துகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாங்கிக் கொள்கிறேன். பாப்பாவுக்கு பிஸியோதெரபி செய்தால் முன்னேற்றம் இருக்கும் என்று கூறினார்கள். நாங்களும் சிறிது காலம் பிஸியோதெரபி செய்தோம். பெரியளவுக்கு முன்னேற்றம் இல்லை. இப்போது பாப்பாவுக்கு எந்த சிகிச்சையும் எடுப்பதில்லை. ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை வாங்கிக் கொள்வோம். மளிகை, காய்கறிகள் வெளியில் வாங்குவோம்.

குடும்ப பட்ஜெட் காரணமாக நீண்ட காலமாகவே பால் எல்லாம் வாங்குவதில்லை. எது இருக்கிறதோ அதை வைத்து குடும்பம் நடத்துவேன். குழந்தைகளும் பெரிதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். ஆண் குழந்தைகளாக இருந்தால் கூட பரவாயில்லை. எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள். அதனால் சற்று பாதுகாப்பான வீடு மட்டும் போதுமானது என்று நினைக்கிறேன். அதற்கு மட்டும் அரசு உதவி செய்ய வேண்டும்.“ என்றார்.
நாம் நீண்ட நேரமாக நின்று பேசுவதைப் பார்த்து, நாற்காலியில் உட்கார சொல்லி செய்கை செய்தாள் சந்தோஷ் – சரண்யா தம்பதியின் மூத்த மகள் அனாமிகா. அவளின் செல்ல கோரிக்கையை தட்ட முடியாமல் நாம் நாற்காலியில் உட்கார்ந்தவுடன், முகம் முழுவதும் புன்னகையால் மலர்ந்தது. அனாமிகாவும், அவள் குடும்பமும் எப்படி நிம்மதியாக அமரப் போகிறார்கள் என்ற கவலையுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

குறிப்பு: சரண்யாவின் கோரிக்கை அடிப்படையில் இந்தக் கட்டுரையில் அவர் மற்றும் குழந்தைகளின் முகம் மறைக்கப்பட்டுள்ளது.
Note:
இக்கட்டான சூழலில் தவிக்கும் பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமார் குடும்பத்துக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com' என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். சந்தோஷ் குமார் குடும்பம் குறித்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாகத் தரப்படும். உங்கள் உதவியை அக்குடும்பத்துக்குக் கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.