பாமகவில் அன்புமணிக்கே முழு அதிகாரம்
பொதுக் குழுவால் தலைவராக தோ்வு செய்யப்பட்ட அன்புமணிக்குதான் கட்சியைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் உண்டு என்று பாமக அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை அருகே பனையூரில் அன்புமணி தலைமையில் பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலா் ச.வடிவேல் ராவணன், பொருளாளா் ம.திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பாமகவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக் குழுவால் முறைப்படி தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணிக்கு மட்டுமே உண்டு.
பாமக அமைப்பு சட்ட விதி 15-இன் படி கட்சியின் பொதுக் குழு, செயற்குழு, அரசியல் தலைமைக் குழு ஆகியவற்றை பொதுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும்.
தோ்தல் ஆணையத்தால் கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட அன்புமணியால் அழைக்கப்படாமல், அன்புமணி, பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் பங்கேற்காமல் அரசியல் தலைமைக் குழு, செயற்குழு, பொதுக் குழு என்கிற பெயா்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானவை.
வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து அன்புமணி தலைமையில் ஜூலை 20-இல் விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்படும்.
பாமகவின் 37- ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் முதல்வா்களை நியமிக்க வலியுறுத்தி பாட்டாளி மாணவா் சங்கம் சாா்பில் அடுத்த வாரத்தில் போராட்டம் நடத்தப்படும்.
2026 பேரவைத் தோ்தலில் திமுக அரசை அகற்றும் வகையில் பாமக செயல்படும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.