அதிமுகவுக்கு அமித்ஷா வீடுதான் நீதிமன்றம்: உ.வாசுகி விமரிசனம்
பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்; கடலில் தவறி விழுந்த வாலிபர்... காயம் இன்றி உயிர் தப்பிய அதிசயம்!
மதுரை பரவை பகுதியை சேர்ந்த இளைஞர் வரதராஜன். வங்கி ஊழியரான இவர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்துள்ளார். மதுரை பாசஞ்சர் ரயிலில் ராமேசுவரம் வந்த வரதராஜன் இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின்னர் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடி சுவாமி தாரிசனம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 6.30 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ரயில் பாம்பன் பாலத்தில் சென்ற நிலையில் பாம்பன் சாலை பாலத்தினை காண வரதராஜன் ரயில் பெட்டியின் கதவின் அருகே எழுந்து சென்றுள்ளார். அங்கு கதவை திறந்து வைத்தபடி பாம்பன் பாலத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.


அப்போது வரதராஜனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் ரயிலில் இருந்து கடலில் விழுந்துள்ளார். கடல் நீரில் விழுந்த வேகத்தில் வரதராஜனுக்கு மயக்கம் தெளிந்ததை தொடர்ந்து அருகில் இருந்த பாறையினை பிடித்தபடி உயிர்பிழைக்க கூக்குரலிட்டுள்ளார். மழை மேகத்துடன் கூடிய இரவு நேரம் என்பதால் கடல் பாறையின் மீது கிடந்த இவர் யார் கண்ணிலும் படவில்லை. இதனால் இரவு முழுவதும் ஆக்ரோஷமான அலைகளுக்கு மத்தியில் வரதராஜன் விடிய விடிய உயிர் பயத்துடன் கடலின் நடுவேயே இருந்துள்ளார்.
ஆழம் நிறைந்த கடல் பகுதியில் விழுந்ததால் வரதராஜனுக்கு சிறு காயம் கூட ஏற்படாத நிலையில், காப்பாற்ற யாரும் வர மாட்டார்களா என்ற அவரது எதிர்பார்ப்பு இன்று காலையில்தான் நிறைவேறியுள்ளது. காலையில் அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாறையின் நடுவே நடுங்கியபடி இருந்த வரதராஜனை மீட்டனர். பின்னர் பாம்பனில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், அவருக்கு மாற்று உடை கொடுத்து உதவினர். இதன் பின்னர் வரதராஜன் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
பாம்பன் ரயில் பாலத்தில் பயணம் மேற்கொண்ட இளைஞர் கடலின் ஆழமான பகுதியில் தவறி விழுந்ததால் சிறிய காயமின்றி உயர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.