பாரதிதாசன் பல்கலை. செனட் உறுப்பினராக தங்கம் மூா்த்தி தோ்வு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேரவைக் குழு (செனட்) உறுப்பினா் பதவிக்கு புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி வெற்றி பெற்றாா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களில் இருந்து ஒருவா் பேரவைக் குழு உறுப்பினராக தோ்வு செய்யப்படுவாா்.
இப்பதவிக்கு புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தியும், ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கோவிந்தனும் போட்டியிட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 193 வாக்குகளில் 190 வாக்குகள் பதிவாகின.
101 வாக்குகள் பெற்று தங்கம் மூா்த்தி வெற்றி பெற்றாா். கோவிந்தன் 88 வாக்குகள் பெற்றாா். ஒரு வாக்கு செல்லாததாகும்.