’உலகின் சிறந்த கணவன்’ - இந்தியக் காதலனை கரம்பிடித்த ரஷ்ய பெண் சொல்லும் 3 காரணங்...
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்து 50 ஆண்டுகளாக கிடைக்காத இழப்பீடு - போராட்டம் தீவிரம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக 1981-ம் ஆண்டு 960 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த மக்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதற்கு எதிராக நிலம் கொடுத்த மக்கள் நீண்ட காலம் போராட்டம் நடத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

அதில் நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் 18 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நிலம் கொடுத்த மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்தக் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டை வழங்க வேண்டும். விவசாயிகள் கல்விக்காக மனம் வந்து மிகக் குறைவான விலைக்குத் தங்கள் விவசாய நிலத்தைக் கொடுத்திருந்தார்கள்.
‘அந்த மக்களுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.60 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இப்போதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மக்கள் சுமார் 45 ஆண்டுகளாக இழப்பீட்டுக்காக காத்திருக்கிறார்கள். 928 ஏக்கரில் சுமார் 300 முதல் 400 ஏக்கர் நிலம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
600 ஏக்கர் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அவர்களுக்கு பணத்தைக் கொடுங்கள் அல்லது நிலத்தைக் கொடுங்கள். விவசாயிகளைக் காத்திருக்க வைத்திருப்பது நியாயமல்ல. இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது.” என்றார்.
இழப்பீடு வழங்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்று சிபிஎம் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது முதல்வரின் கவனத்துக்கு சென்று, அமைச்சர் எ.வ. வேலு நேரடியாக சண்முகத்திடம் பேசியுள்ளார். “இந்தப் பிரச்னைக்கு முழு தீர்வு கிடைப்பதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

இன்னும் ஒரு சில நாள்களில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.” என்று வேலு கூறியுள்ளார். அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.