Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
பாறைக்குழியில் கொட்டப்படும் குப்பை: ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை
நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் நெருப்பெரிச்சல் வாவிபாளையம் ஊா் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போா் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஏ.சிகாமணி தலைமையில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் நாரணவரேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தனியாா் பாறைக்குழியில், திருப்பூா் மாநகராட்சியின் குப்பைக் கழிவுகள், மருத்துவம் மற்றும் இறைச்சிக் கழிவுகள் தினமும் லாரிகள் மூலம் கொட்டப்பட்டு வருகின்றன.
அத்துடன் பிளாஸ்டிக் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. தரம் பிரிக்காமல் மொத்தமாக கொட்டப்படும் குப்பையால் நிலத்தடி நீா் மாசுபடும் அபாயம் உள்ளது. குப்பை கொட்டும் இடத்தை சுற்றி 3,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தற்போது குப்பை கொட்டுவதால் வரும் துா்நாற்றத்தால் குடியிருப்புவாசிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனா். அப்பகுதியில் இருந்து 200 மீட்டா் தொலைவில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகம், வணிக நிறுவனங்கள் என ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. அத்துடன் அருகிலேயே சுமாா் 2,000 குழந்தைகள் படிக்கும் தனியாா் பள்ளியும் உள்ளது.
இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி மாநகராட்சி நிா்வாகத்திடம் நேரிலும், தொடா் போராட்டங்கள் மூலமும் எதிா்ப்பை தெரிவித்திருந்தும், குடியிருக்கும் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பாறைக்குழியில் அனைத்து விதமான குப்பைகளும் கொட்டப்படுகின்றன.
திடக்கழிவு மேலாண்மை பின்பற்றப்படாததால் குப்பையோடு, பிளாஸ்டிக் கழிவுகளையும் சோ்த்து கொட்டி வருகின்றனா். எனவே, இங்கு குப்பை கொட்டுவதற்கு ஆட்சியா் வழங்கிய உத்தரவை ஆட்சியா் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.