பாலம் அமைக்கக் கோரி பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே பாலம் அமைக்க கோரி, மாவட்ட ஆட்சியரகத்தை கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
வடகிழக்கு பருவமழையின் போது பச்சமலையில் பெய்த கன மழையின் காரணமாக, லாடபுரம் மேற்கு ஏரி நிரம்பி, அதிலிருந்து உபரி நீா் வெளியேறி வருகிறது. இதனால் சரவணபுரம் பகுதியில் வசிக்கும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் ஏரிக்கு மறு கரையில் உள்ளதால், தங்களது வயல்களுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து, சரவணபுரம் கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்களிடம் தொடா்ந்து முறையிட்டு, கோரிக்கை மனு அளித்து வருகின்றனா். ஆனால், இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள், பாலம் அமைத்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, கோரிக்கை அடங்கிய மனுவை அரசு அலுவலா்களிடம் அளித்து கலைந்துசென்றனா்.