பாலியல் குற்றங்கள்: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து தலைமைச் செயலர் முருகானந்தம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் இன்று(புதன்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயராம், டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான புகார் எழுந்தால் துறை அதிகாரிகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.