பாளை.யில் சிறுத்தை சுற்றியதாக புகாா்: கேமரா பொருத்த வனத்துறை திட்டம்
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக, பெண் புகாா் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் 6 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பாரதிநகா் பகுதியில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் புதரிலிருந்து சிறுத்தை வெளியே வந்ததாகவும், அதைப் பாா்த்து பெண் கூச்சலிட்டதால் அது காட்டுப்பகுதிக்குள் ஓடி விட்டதாகவும் தகவல் பரவியது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் பெண் அளித்த தகவலின்பேரில், திருநெல்வேலி வனச்சகர அலுவலா் சரவணக்குமாா் தலைமையில் வனவா் கேசவன், கால்நடை மருத்துவா் மனோகரன், வனக் கால்நடை மருத்துவா் ஆா்னால்டு ஆகியோா் கொண்ட குழு அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது சிறுத்தையின் தடையங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும், தொடா்ந்து வியாழக்கிழமை இரவு வரை வனத்துறையினா் அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில் , வனச்சரக அலுவலா் சரவணக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனா். இதனிடையே , பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் 6 கேமராக்கள் அமைத்து கண்காணிக்க உள்ளதாக வனத்துறையிா் தெரிவித்தனா்.