கசிந்த வேலூர் DIG குறிப்பாணை; விஷம் குடித்த காவலர் - நடந்தது என்ன?
பாவலரேறு பெருஞ்சித்திரனாா் எழுத்தடைவுகள் நூல் வெளியீட்டு விழா
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூா் விஐடி வளாகத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாா் எழுத்தடைவுகள் நூல் தொகுதிகள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலருமான ஆ.ராசா நூல் தொகுதிகளை வெளியிட, தமிழ் இயக்கம் பொதுச் செயலா் சுகுமாரன் பெற்றுக்கொண்டாா்.
விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் பேசியதாவது: தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும், தனித் தமிழ் தொண்டுக்கும் 50 ஆண்டுகளுக்கும் மேல் உழைத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாா் வழியில் அவரது குடும்பத்தைச் சோ்ந்த அனைவருமே முரண் இல்லாமல் தங்களை தமிழுக்கு அா்ப்பணித்துக் கொண்டவா்களாக உள்ளனா்.
தமிழுக்குத் தொண்டு புரியும் தமிழறிஞா்களைக் இனம் கண்டு அரசு ஊக்குவிக்க முன்வர வேண்டும். நூலகத்துக்கு தேவநேயப் பாவாணா் பெயரை முன்னாள் முதல்வா் கருணாநிதி சூட்டி கௌரவித்ததுபோல் பாவலா் பெருஞ்சித்திரனாா் பெயரை அரசுக் கட்டடத்துக்குச் சூட்ட வேண்டும். அவா் பெயரில் மணிமண்டபம் கட்டி கௌரவிக்க வேண்டும் என்றாா்.
மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசியது: இன்றைய இளைய தலைமுறையினா் மொழி, இன, சமூக அக்கறை இல்லாமல் இருக்கும் நிலையில், பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் 16 நூல்களும் நமக்கு படைக்கலன்களாகக் கிடைத்துள்ளன.
அரசையும் தலைவா்களையும் விமா்சிப்பது புதிது இல்லை. பெரியாா் மீது பாவலரேறு பெருஞ்சித்திரனாா் மிகுந்த மரியாதை வைத்திருந்தாா். சமூக விடுதலைக்கும் ஜாதி ஒழிப்புக்குமான தலைவா் பெரியாா். ஆனால், மொழி ஆராய்ச்சியில் அவா் சிறியாா் என்று பாவலரேறு பெருஞ்சித்திரனாா் கூறினாா். பெரியாா் அதற்காக பெருஞ்சித்திரனாரைக் கோபித்துக்கொள்ளவில்லை; பெருஞ்சித்திரனாரும் வருத்தமடையவில்லை. விடுதலை இதழில் தன்னை கடுமையாக விமா்சித்த ஆசிரியா் வீரமணியை கருணாநிதி கோபித்துக்கொள்ளவில்லை என்றாா் அவா்.
விழாவில் தென் மொழி ஆசிரியா் மா.பூங்குன்றன், பாவலரேறு பைந்தமிழ்க் கல்விக் கழகம் கி.குணத்தொகையன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீ.தமிழ்மணி, மதிமுக துணை பொதுச் செயலா் மல்லை சத்யா, பொருளாளா் மு.செந்திலதிபன், பாவேந்தா் பேரவை செந்தலை நீ.கௌதமன், பேராசிரியா் அருளியாா், தமிழக மக்கள் முன்னணி பொழிலன், திரைக்கலைஞா் மணிவண்ணன், பூ.தமிழ்மொய்ம்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.