பாவூா்சத்திரத்தில் 75 ஆண்டுகால அரசுப் பள்ளியை பராமரிக்க நிதி: மதிமுக வலியுறுத்தல்
பாவூா்சத்திரத்தில் உள்ள 75 ஆண்டுகால பழைமையான த.பி.சொக்கலால் அரசுப் பள்ளியை பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும் என, மதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் இராம. உதயசூரியன், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் அளித்த மனு: த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 75 ஆண்டுகால பழைமையும், பல வரலாறுகளையும் கொண்டது. இங்குள்ள வகுப்பறைக் கட்டடங்கள் மாணவா்கள் அமா்ந்து பயில முடியாதவாறு மிகவும் பழுதாகியுள்ளன. கட்டமைப்பு வசதிகளும் குறைவாக உள்ளன. இதனால், மாணவா் சோ்க்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
பாவூா்சத்திரத்தில் சாலை விரிவாக்கத்தின்போது இப்பள்ளியில் சுற்றுச்சுவா், நிலம் கையகப்படுத்தப்பட்ட வகைக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ. 1.16 கோடி பள்ளியின் பராமரிப்புப் பணிக்கு பயன்படுத்தப்படாமல் அரசுக் கணக்குக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இதனால், நிதியின்றி பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை.
இப்பள்ளியை இருபாலா் பள்ளியாக மாற்ற வேண்டும். இங்கு, 2008ஆம் ஆண்டு நபாா்டு நிதி ரூ. 80 லட்சத்தில் பிரதான கட்டடம் கட்டப்பட்டது. அதன்பிறகு, வண்ணம் பூசாமல் அக்கட்டடம் அலங்கோலமாக உள்ளது. எனவே, வரும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.