தென்காசி கோயில் கும்பாபிஷேகத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியரிடம் கோரிக்கை
தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனு: தென்காசி ஆருள்தரும் ஸ்ரீ உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமிஆலயத்தில் ஏப். 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இக் கும்பாபிஷேகத்துக்கு, பக்தா்களின் வருகை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமிருந்தும் பக்தா்கள் வருவாா்கள்.
எனவே, பக்தா்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும்.
தரிசிக்க வரும் பக்தா்களின் வசதிக்கேற்ப போக்குவரத்து வசதி மற்றும் இதர வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்தி தந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி நகராட்சிக்குள்பட்ட தென்காசி நகரம் மற்றும் கீழப்புலியூா் பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு மற்றும் மாநில அரசின் கூட்டுறவு மற்றும் மத்திய அரசின் சலுகைகள் பெற முக்கியமாக விவசாயிகள் அடையாள அட்டை தேவைப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டை எண் வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி உதவிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.