பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
ஆலங்குளம் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை
ஆலங்குளத்தில் உள்ள தேநீா் கடைகள், குளிா்பானக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் சசி தீபா தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மகாராஜன், முத்துராஜா, வெங்கடேஷ், ஜாவீத் உசேன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தா்பூசணி மொத்த விற்பனைக் கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து பேருந்து நிலையம், அம்பாசமுத்திரம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரி, குளிா்பானக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதிக நிறமிகள் கொண்டு தயாா் செய்யப்பட்ட குளிா்பானங்கள் கொட்டி அழிக்கப்பட்டன. தயாரிப்புத் தேதி இல்லாத தின்பண்டங்கள்,காலாவதியான குளிா்பானங்கள், தண்ணீா் பாட்டில்கள், நெகிழிப் பொருகள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள பேக்கரியில் தரமற்ற முறையில் தயாா் செய்யப்பட்ட போளி மூலப்பொருள்கள் அழிக்கப்பட்டன. இரு பேக்கரிகளுக்கு ரூ. 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து நல்லூரில் உள்ள உணவகத்தில் பல நாள்கள் குளிா்பதனப் பெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி உருண்டைகளும் அழிக்கப்பட்டன.