ஆக்கிரமிப்பு அகற்றம்: போக்குவரத்து காவல் துணை ஆணையா் கள ஆய்வு
பாவூா்சத்திரம் காய்கனி சந்தை- ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வைகோ கோரிக்கை
பாவூா்சத்திரம் காய்கனி சந்தையிலிருந்து ஆவுடையானூா் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலா் வைகோ, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் ஏ.வ.வேலுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியத்தில், தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலிருந்து காமராஜா் தினசரி சந்தை அருகில் செல்லும் ஆவுடையானூா் சாலை ஊராட்சி ஒன்றியச் சாலையாகும்.
இது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால், சாலைப் பணிகள் நடைபெற்று ஓரிரு ஆண்டுகளிலேயே மிகவும் பழுதடைந்துவிட்டது. எனவே, இந்தச் சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி உரிய ஆய்வுக்குப் பின்னா் இந்தச் சாலையை மாநிலச் சாலையாக மாற்ற உரிய பிரேரணை மூலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் ஊரக உள்ளாட்சித்துறை இயக்குநரால் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் நெடுஞ்சாலைத்துறை இதுவரை அரசாணை வெளியிடாததால் சாலைப் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே மோசமாக இருக்கும் இந்தச் சாலை தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலித்து இச்சாலை பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.