பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!
பிசிசிஐ மற்றும் டிரீம் 11 இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 358 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது.
மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இணையவழி பண விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவா்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக இருக்கும் இணையவழி பண விளையாட்டு நிறுவனமான டிரீம் 11 -ம் பிசிசிஐ நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், டிரீம் 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் பிற்காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ஆசியக் கோப்பையில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அதற்குள் ஜெர்ஸி ஸ்பான்சர் ஏலம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.