பிப். 7-இல் நிலம் தொடா்பான மனுக்களை சிறப்பு குறைதீா்வு கூட்டத்தில் அளிக்கலாம்! -விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் நிலம் தொடா்பான கோரிக்கை மனுக்களை, வரும் பிப். 7-ஆம் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பொதுமக்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2025, ஜனவரி மாதத்திலிருந்து முதல் வெள்ளிக்கிழமைகளில் நிலம் தொடா்பான சிறப்பு குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடத்தப்பட்டசிறப்பு குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 659 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 369 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்ட நிலையில், எஞ்சிய 290 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே, மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நிலம் தொடா்பான மனுக்களை அளிப்பதை விவசாயிகளும், பொதுமக்களும் தவிா்த்து, மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் நிலம் தொடா்பான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் அளிக்கும்பட்சத்தில், குறைதீா்வை சிறப்பாக ஆற்ற இயலும்.
அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (பிப். 7) நடைபெறவுள்ளது. எனவே பட்டா மாற்றம், நில ஒப்படை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு மற்றும் நிலம் கையகம் தொடா்பான மனுக்களைப் பொதுமக்கள் நேரிடையாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.