கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?
பிரதமர் கங்கை கொண்ட சோழபுரம் வருவது தமிழகத்துக்கு பெருமை: தங்கம் தென்னரசு
பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சர்வதேச சதுப்பு நில சூழல் அமைப்பு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் சென்னை அடையாறு முகத்துவாரத்தில் பங்கேற்ற நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அலையாத்தி தோட்டம் எழுப்புதல் நிகழ்வை தொடக்கி வைத்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹீ, அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் என பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது,
”சதுப்பு நில சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறு முகத்துவாரத்தில் அலையாத்திக் காடுகளை உருவாக்கும் நோக்கத்தில் அதற்கான மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடலோரங்களில் உள்ள 14 மாவட்டங்களிலும் இப்பணிகளை மேற்கொள்வதன் மூலம், கடல் அரிப்புகளை தடுக்க இந்த அலையாத்திக் காடுகள் உறுதுணையாக இருக்கும். அதேபோல் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்தும் கடலோரப் பகுதிகளை பாதுகாக்க ஒரு தொலைநோக்கு திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 12 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில் நிகழாண்டு கூடுதலாக 6 மரக்கன்றுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகர். அங்குள்ள பொன்னேரி ஏறத்தாழ 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் பாசன பரப்பு ஏறத்தாழ 1,374 ஏக்கர் உள்ளது. அந்தப் பாசன பகுதிகளுக்கும், அங்குள்ள விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், அந்த ஏரியை சுற்றுலா தளமாக மாற்றவும் தமிழக அரசு சார்பில் ரூ.19.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஏரியின் புனரமைப்பு மற்றும் நீர் வரத்து கால்வாய்கள், உபரி நீர் வழி கால்வாய்கள் ஆகியவற்றை மறுசீரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கங்கைகொண்ட சோழபுரம், குருவாயூரப்பர் கோயில் என சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாபெரும் வரப் பிரசாதமாக இருக்கும்.
ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பு மற்றும் கடல் கடந்த படையெடுப்பின் 1000-வது ஆண்டை குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 27ஆம் தேதி கங்கை கொண்ட சோழபுரத்து வருகை தர உள்ளார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள பெருமையாகும்” என்றார்
இதையும் படிக்க: நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!