பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்திற்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பிரதமரை மோகன் பகவத் சந்தித்துள்ளார்.
பஹல்காம் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக பிரதமரை அவர் நேரில் சந்தித்ததாகத் தெரிகிறது.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏப். 22 ஆம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இதுவரை 537 பேர் அட்டாரி - வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.