நிதி தொழில்நுட்பத் துறையில் எண்ணற்ற வாய்ப்பு: லண்டனில் பியூஷ் கோயல் பேச்சு
வைரத் தொழிற்சாலை மற்றும் நிதிதொழில்நுட்பத் துறையில் இந்தியாவில் எண்ணற்ற வாய்ப்புகள் இருப்பதால், இந்தியாவுடன் பிரிட்டன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இந்தியா-பிரிட்டன் இடையேயான வா்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இருநாள் பயணமாக லண்டன் சென்றுள்ள அவா், அந்நாட்டு அதிகாரிகள், முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் இவ்வாறு பதிவிட்டாா்.
பிரிட்டனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டுக்கு பியூஷ் கோயல் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரிட்டன் வணிக மற்றும் வா்த்தக துறைச் செயலா் ஜோனதன் ரேனல்ட்ஸுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் முதலீடுகள் குறித்து பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினாா்.
ரெவல்யூட் நிதி நிறுவனத் தலைவா் மாா்ட்டின் கில்பா்டுடன் இந்திய நிதித் தொழில்நுட்பத் துறைகளில் உள்ள எண்ணற்ற வாய்ப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதில் உலகளாவிய நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் பியூஷ் கோயல் பேசினாா்.
அதேபோல் டிபியா்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அல் குக்குடன் வைரத் தொழிற்சாலைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் பியூஷ் கோயல் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து பிரிட்டன் சென்றுள்ள இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் துணைத் தலைவா் அனந்த் கோயங்கா மற்றும் முன்னாள் தலைவா்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
பயணத்தின்போது பிரிட்டன் நிதியமைச்சா் ரேச்சல் ரீவ்ஸுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.