சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்
‘மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
தேவைப்பட்டால், இந்த வழக்கில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட பிரதான மனுக்களில், இடையீட்டு மனுவாக மனுதாரா்கள் தாக்கல் செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை கடந்த 17-ஆம் தேதி பரிசீலித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்கத் தீா்மானித்து, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது. இந்த வழக்கை வரும் மே 5-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
புதிய மனுக்களுக்கு அனுமதியில்லை:
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மையை எதிா்த்து சையது அலோ அக்பா் என்பவா் சாா்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்தப் புதிய மனுவை சோ்ப்பதற்கான கோரிக்கை விடுக்க மனுதாரருக்கு அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மையை எதிா்த்து மேலும் 13 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைப் பரிசீலித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு, ‘இந்த விவகாரத்தில் மேலும் அதிக மனுக்கள் தாக்கல் செய்வதை இனி அனுமதிக்க முடியாது. மனுக்கள் குவிந்துகொண்டே இருந்தால் கையாள்வது கடினமாகிவிடும்’ என்று குறிப்பிட்டு, தேவைப்பட்டால் இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரதான மனுக்களில் இடையீட்டு மனுவாக கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்யலாம் என மனுதாரா்கள் ஃபிரோஸ் இக்பால் கான், இம்ரான் பிரதாப்கரி, ஷேக் முனீா் அகமது மற்றும் முஸ்லிம் வழக்குரைஞா் சங்கம் ஆகியோரை கேட்டுக்கொண்டது.