சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள்- ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவமதித்தும், நாடாளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான அஃப்சல் குருவைப் புகழ்ந்தும் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் இருவா் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அமா்வு கடந்த 22-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பில், இந்த இரண்டு பேருக்கு எதிராக தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளை ஒன்றிணைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மதுரையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டமொன்றில் பேசிய இந்த இருவா், ‘நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அஃப்சல் குருவைப் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளனா்.
மேலும், ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்பு, ஹிஜாப் தொடா்பான வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்ற தீா்ப்பு, கிறிஸ்தவா்களின் பண்டிகை, உடலில் சாம்பலை பூசிக்கொள்ளும் ஹிந்துக்களின் வழக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சா்ச்சைக்குரிய அவதூறு கருத்துகளைப் பேசியுள்ளனா்.
இதையடுத்து, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருவருக்கு எதிராக வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு, இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறையைத் தூண்டியாக மாா்ச் 18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதே விவகாரத்தில் தஞ்சாவூரில் அதே நாளிலும், கா்நாடகத்தில் மறுநாளிலும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரியும், கா்நாடகத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினா்கள் மனுத் தாக்கல் செய்தனா்.
ஒரே சம்பவத்துக்காக பல்வேறு வழக்குகளை பதிவு செய்வது அரசமைப்புச் சட்டத்தின் 20(2) பிரிவை மீறுவதாகும் என்று மனுதாரா்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழகம் மற்றும் கா்நாடக அரசு தரப்பு வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த பிறகு வழக்குகளை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் 3 இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன் ஒன்றிணைத்து உத்தரவிட்டனா். அதேநேரம், மனுதாரா்களின் கருத்து கடும் ஆட்சேபத்துக்குரியது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.