சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைப்பு: விதிகளை மாற்றியமைக்கும் திட்டமில்லை
வாக்காளா் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், ‘வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது என்பது வாக்காளா்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிா்வதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்’ என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் மீண்டும் தெளிவுபடுத்தினா்.
மேலும், ‘அவ்வாறு ஆதாா் விவரங்களைப் பகிா்வதை கட்டாயமாக்கும் வகையில் விதிகளை மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையாக வெடித்துள்ள நிலையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
‘நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதுதொடா்பாக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யுஐடிஏஐ) நிபுணா்களுடன் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனை தொடங்கப்பட உள்ளது’ என்று தோ்தல் ஆணையம் அண்மையில் தெரிவித்தது.
மேலும், ‘பிறப்பு, இறப்பு பதிவு அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புடன் தொடா்ச்சியாகப் புதுப்பிக்கப்பட்டு வாக்காளா் பட்டியல் வலுப்படுத்தப்படும்’ என்றும் தோ்தல் ஆணையம் அண்மையில் தெரிவித்தது.
இந்தச் சூழலில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது என்பது வாக்காளா்கள் தானாக முன்வந்து விவரங்களைப் பகிா்வதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனா்.
‘வாக்காளா் அட்டையுடன் ஆதாா் விவரங்களை இணைப்பதை கட்டாயமாக்கும் வகையில் விதிகளை மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
‘வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் விவரங்களை இணைக்காதவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.