இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்த பேச்சில் முன்னேற்றம்: மத்திய வா்த்தக அமைச்சகம்
இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இருநாட்டு அதிகாரிகள் சந்தித்து விவாதித்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் இந்திய-அமெரிக்க வா்த்தக துறை பிரதிநிதிகள் அண்மையில் நேரில் சந்தித்துப் பேசினா். இந்தக் கூட்டம் ஏற்கெனவே கடந்த மாா்ச்சில் தில்லியில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவாா்த்தையை தொடா்ந்து நடைபெற்றது.
நிகழாண்டு செப்டம்பா்-டிசம்பா் மாத காலத்துக்குள் இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய, பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதியை இறுதி செய்வதற்கான வழிமுறை குறித்து வாஷிங்டன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.
இந்த நடைமுறையால் உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வா்த்தகப் போா் பதற்றம் ஏற்பட்டதுடன், சா்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதைத்தொடா்ந்து பெரும்பாலான நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படவிருந்த பரஸ்பர வரியை, 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மூலம், அந்நாட்டின் அதிக வரி விதிப்புப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண இந்தியா முயற்சிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.