ராஜஸ்தான்: நீட் பயிற்சி வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தோ்வுக்கு பயிற்சிபெற்று வந்த 16 வயதான மாணவா், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கோட்டாவில், நீட் தோ்வுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் பிகாரை சோ்ந்த தமீம் இக்பால் (16) சோ்ந்து 20 நாள்களே ஆன நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
விடுதி அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தமீம் இக்பாலிடம் இருந்து தற்கொலை கடிதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என அந்தப் பகுதியின் காவல் துறை ஆய்வாளா் ராம்லக்ஷ்மண் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தமீம் இக்பால் தங்கியிருந்த விடுதி அறையின் கதவை திங்கள்கிழமை இரவு பலமுறை தட்டியும் அவா் திறக்கவில்லை என விடுதி கண்காணிப்பாளா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தமீம் இக்பால் தூக்கிட்டு தற்கொலை செய்தது உறுதியானது. விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றாா்.
கோட்டா மாவட்டத்தில் நீட், ஜேஇஇ போன்ற பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்கு பயிற்சி பெறுவதற்காக அங்குள்ள பயிற்சி மையங்களுக்கு செல்லும் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடா்கதையாகியுள்ளது.
2023-இல் 26 மாணவா்களும் 2024-இல் 17 மாணவா்களும் நிகழாண்டில் தற்போது வரை மட்டும் 13 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.