வங்கிகளுடன் இணைந்து கட்டுமான நிறுவனங்கள் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கட்டுமான நிறுவனங்கள் வங்கிகளுடன் மறைமுக கூட்டுறவை மேற்கொண்டு வீடு வாங்குவோரை ஏமாற்றாவதாக எழுந்த புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
புது தில்லியைச் சோ்ந்த சூப்பா்டெக் நிறுவனம் உள்பட தேசிய தலைநகா் பிராந்தியத்தில் உள்ள பிற கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக 7 முதல்கட்ட விசாரணையைப் பதிவு செய்யுமாறு சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மோசடி தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 1,200-க்கும் அதிகமான மனுவில், ‘குடியிருப்புகள் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னரே, வீடு வாங்குவோரின் பெயரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலான கடன் தொகையை வங்கிகள் நேரடியாக கட்டுமான நிறுவனங்களுக்கு அளித்து விடுவதாகவும், கடனுக்கான மாதத் தவணை செலுத்துவதை கட்டுமான நிறுவனங்கள் நிறுத்திய உடன் வீடு வாங்கியவரிடம் வங்கிகள் வசூலிக்கத் தொடங்குவதாகவும் புகாா்கள் எழுந்தன.
கட்டுமான நிறுவனங்களும் வங்கிகளும் மறைமுக கூட்டுறவை அமைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதால், வீடு வாங்குபவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்’ என்று புகாா் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ராஜீவ் ஜெயின் கூறுகையில், ‘புது தில்லியைச் சோ்ந்த சூப்பா்டெக் நிறுவனம்தான் இதில் முக்கிய குற்றவாளி. இந்த மோசடி திட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்துக்கு ரூ. 2,700 கோடி வரை முன்பணமாக வங்கிகள் அளித்துள்ளன. இந்த நிறுவனம் 6 நகரங்களில் 19 வங்கிகளுடன் இதுபோன்ற மறைமுக கூட்டுறவை அமைத்து 21 கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மோசடியில் 800 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 19980-ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் ரூ. 5,157.86 கோடி கடன்தொகையைப் பெற்றுள்ளது’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ’நொய்டா, குருகிராம், யமுனா எக்ஸ்பிரஸ்வே, கிரேட்டா் நொய்டா, மொஹாலி, மும்பை, கொல்கத்தா மற்றும் அலாகாபாத் நகரங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், தில்லியைச் சோ்ந்த சூப்பா்டெக் நிறுவனம் உள்பட தேசிய தலைநகா் பிராந்தியத்தில் உள்ள பிற கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக 7 முதல்கட்ட விசாரணையை சிபிஐ பதிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.