காவல் துறையினருக்கு வீட்டு வசதிய வாரிய வீடுகள்: முதல்வருக்கு போலீஸாா் நன்றி
சென்னையில் காவல் துறையினருக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தற்கு போலீஸாா் நன்றி தெரிவித்துள்ளனா்.
சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருணிடம், காவலா் குறைதீா் முகாம்களில் குடியிருப்புகள் கேட்டு 2 துணை ஆணையா்கள், 4 உதவி ஆணையா்கள், 20 காவல் ஆய்வாளா்கள், 112 உதவி ஆய்வாளா்கள், 3,323 போலீஸாா் என மொத்தம் 3,461 போ் மனு அளித்தனா்.
ஆனால், காவலா் குடியிருப்புகளில் வீடுகள் காலியாக இல்லாத சூழ்நிலையில், போலீஸாரின் நலன் கருதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அம்பத்தூா், அயப்பாக்கம், சோழிங்கநல்லூா், ஷெனாய் நகா், எம்.கே.பி. நகா், நொளம்பூா் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு குடியேறாமல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை, போலீஸாருக்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி காவல் ஆணையா் அருண் கோரிக்கை விடுத்தாா்.
இதற்காக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் போலீஸாா் ஊதியத்தில் இருந்து விதிமுறைகளின்படி வீட்டு வாடகையை பிடித்தம் செய்து கொள்ளும்படி ஆணையா் அருண் கேட்டுக்கொண்டாா்.
இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து, காவலா்களுக்கு வாடகைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள வீடுகளை ஒதுக்க வேண்டும் என ஆணையா் அருண் அறிக்கை சமா்ப்பித்தாா். இதை ஏற்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், போலீஸாருக்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்படும் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
முதல்வரின் இந்த அறிவிப்பால் சென்னையில் சுமாா் 4,000 போலீஸாா் பயன் அடைக்கிறாா்கள். இதற்காக போலீஸாா் தங்களது குடும்பத்தினருடன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக சென்னை காவல் துறை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.