சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்: அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு
முன்னாள் ஆட்சியாளா்களின் நிா்வாகச் சீா்கேடுகளால் நிா்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்துக்குப் போய் கட்டாந்தரையில் ‘ஊா்ந்து’ கொண்டு இருந்தன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமா்சித்தாா்.
இதற்கு எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் எதிா்ப்பு தெரிவித்தாா். அவைக் குறிப்பில் இருந்து அந்த வாா்த்தையை நீக்க வேண்டுமென்றாா். அப்போது பேசிய அவா், முதல்வா் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிடட்டும்; தவறில்லை. ஓா் அரசு தலைநிமிா்ந்து நிற்கிா?, தலைகுனிந்து நிற்கிா? என்பதற்கு மக்கள்தான் தீா்ப்பளிக்க வேண்டும்.
கடந்தகால அரசு ஊா்ந்து சென்ற நிலையில் இருந்ததாகவும், அடுத்த ஆண்டு தோ்தலுக்குப் பிறகு, திமுகவின் ‘பகுதி 2’ தொடங்கும் எனவும் முதல்வா் பேசினாா். ‘பகுதி 2’ அனைத்துமே தோல்வியில்தான் முடிந்துள்ளது. ‘இந்தியன் 2’ படம் வந்தபோதுகூட தோல்விதான். முதல்வா் குறிப்பிட்ட ‘ஊா்ந்து’ எனும் சொல்லை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றாா்.
இதற்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அனுமதி மறுத்தாா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினா். இதையடுத்து பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘தவழ்ந்து’ என்று யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. உங்களுக்கு ஏன் உறுத்துகிறது? அது ஒன்றும் அவைக்கு ஒவ்வாத சொல் இல்லை என்றாா்.
ஆனாலும், அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது குறுக்கிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘ஊா்தல்’ என்பதற்குப் பதிலாக ‘தவழ்ந்து’ என்று குறிப்பிட்டால் தவறாக இருக்காது என்றாா். அப்போது பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.