காமன்வெல்த் வழக்கு தீா்ப்பு: தமிழக காங்கிரஸ் வரவேற்பு
காமன்வெல்த் ஊழல் வழக்கிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காமன்வெல்த் விளையாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோா் மீது ஒப்பந்தங்கள் வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்ததாக எதிா்க்கட்சிகளால் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதோ்தல் அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
அந்த குற்றச்சாட்டு குறித்து, மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து எந்த குற்றமும் நிகழவில்லை என்ற முடிவு அறிக்கையை ஏற்கெனவே 2014-இல் சமா்ப்பித்தது. 2016-இல் மத்திய பாஜக அரசின் அமலாக்கத் துறை பண முறைகேடு நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
அந்த முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த 9 ஆண்டுகளில் எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதிய ஆவணங்களை திரட்ட முடியவில்லை என்று கூறி, அமலாக்கத் துறையே தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சஞ்ஜீவ் அகா்வால் முன்னிலையில் வழக்கை முடிக்க முடிவு செய்து அறிக்கையை சமா்ப்பித்தது.
இதையடுத்து சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோரை நிரபராதிகள் என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இந்தத் தீா்ப்பு பாஜகவின் அவதூறு அரசியல் மீது மிகப்பெரிய சம்மட்டி அடியாக விழுந்துள்ளது.
அதேபோல, ராபா்ட் வதேரா மீது வழக்கு, நிலக்கரி ஊழல், நேஷனல் ஹெரால்ட் வழக்கு என தொடா்ந்து அமலாக்கத் துறை மூலமாக பல்வேறு வழக்குகளை தொடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு அச்சுறுத்தி வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.