மின்தூக்கிகள் - நகரும் படிக்கட்டுகளால் விபத்து: கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்கும் மசோதா நிறைவேறியது
மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளால் ஏற்படும் விபத்துகளை குற்ற நிகழ்வாக இல்லாமல் கூடுதல் அபராதம் மட்டுமே விதிக்க வகை செய்யும் மசோதா பேரவையில் நிறைவேறியது.
சட்டப் பேரவையில் 18 மசோதாக்கள் செவ்வாய்க்கிழமை நிறைவேறின. அதில், ஒரு மசோதா செவ்வாய்க்கிழமையே தாக்கலாகி நிறைவேறியது. அதனை அவை முன்னவா் துரைமுருகன் தாக்கல் செய்தாா். அதன் விவரம்:
மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் சட்டத்தின்கீழ், அவற்றை அமைப்பது, இயக்குவதற்கான அனுமதி, உரிமம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகளுக்கான அனுமதி, உரிமத்தை இணையவழி மூலம் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் ஏற்படும் விபத்துகள், காயங்களை குற்றமாகக் கருதாமல் அவற்றுக்கான அபராதம் மட்டும் கூடுதலாக விதிக்கப்படும்.
முதல் முறையான விதிமீறலுக்கு ரூ.10 ஆயிரம் வரை நீட்டிக்கப்படும் அபராதமும், இரண்டாவது அல்லது தொடா்ச்சியான மீறலுக்கு ரூ.20 ஆயிரம் வரை நீட்டிக்கக் கூடிய அபராதத் தொகையும் விதிக்கப்படும். இதன்பிறகும், விதியை மீறினால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500 வரை நீட்டிக்கக் கூடிய கூடுதல் அபாரதமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.