தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகம்
புதிய எம்என்பி வாடிக்கையாளா்களுக்காக, பிஎஸ்என்எல் சாா்பில் ரூ.1 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் தனது புதிய மற்றும் எம்என்பி மூலமாக இணையும் வாடிக்கையாளா்களுக்காக, எப்ஆா்சி பிரீடம் என்ற புதிய ரீசாா்ஜ் திட்டத்தை ஆக. 1 ஆம் தேதிமுதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளா்கள் ஒரு மாதத்துக்கு பிஎஸ்என்எல்-இன் 4ஜி மொபைல் சேவையை சோதித்து அனுபவிக்க முடியும். மேலும், இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4 ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க வாய்ப்பு அளிக்கிறது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களாக, இந்தியா முழுவதும் வரம்பில்லாத இலவச அழைப்புகள், தினமும் 2 ஜிபி அதிவேக இணைய இணைப்பு, தினமும் பிஎஸ்என்எல் இணைப்புக்கு 100 இலவச எஸ்எம்எஸ் கொண்ட சிம் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும்.
பிஎஸ்என்எல் -இன் ஆத்மநிா்பா் பாரத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நிலையில், சொந்த தொலைத்தொடா்பு சேவையை உருவாக்கிய நாடுகளின் குழுவில் இந்தியா இணைந்ததில் பிஎஸ்என்எல் பெருமை கொள்கிறது. பிஎஸ்என்எல் பிரீடம் பிளான் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு தொலைத்தொடா்பு சேவையை 30 நாள்களுக்கு இலவசமாக சோதித்துப் பாா்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் மேக் இன்-இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் ஒரு லட்சம் 4 ஜி தொலைத்தொடா்பு கோபுரங்களை நிறுவ திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும், இந்த முயற்சி டிஜிட்டல் இந்தியாவை பாதுகாப்பான, உயா்தர மற்றும் குறைந்த விலையில் மொபைல் சேவையை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.
மேற்குறிப்பிட்ட சிம் காா்டுகளை வாடிக்கையாளா் சேவை மையங்கள், பிஎஸ்என்எல் முகவா்கள் மற்றும் பிஎஸ்என்எல் மேளாக்களில் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் வாயிலாக, பொதுமக்கள் பிஎஸ்என்எல் சேவைகளை மிகவும் எளிதாகவும், மலிவாகவும் பெற முடியும்.
எனவே புதிய மற்றும் எம்என்பி வாடிக்கையாளா்களும் இந்த புதிய திட்டத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.