``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்ப...
புதிய பாய்ச்சல்; புதிய கோணங்கள் - 2010-க்குப் பிறகான தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகள்
தமிழ் சினிமா இப்போது ரொம்பவும் மாறிவிட்டது. குறிப்பாக, ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு தற்போது திரைப்படங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
அதற்கேற்ப படங்களின் கன்டென்ட்களும் மெருகேறியிருக்கிறது. இப்படியான ஒரு புதுமையான பாய்ச்சலை 2010-க்குப் பிறகு வந்த பல இளம் இயக்குநர்களும் நிகழ்த்திக்காட்டினார்கள்.
இதற்கு 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகச் சொல்லலாம். கடந்த வாரம் சசிகுமார் நடித்திருந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் வெளியாகியிருந்தது. 25 வயதான அபிஷன் ஜீவிந்த் என்ற இளம் இயக்குநர் அன்பை போதிக்கும் அப்படைப்பை எடுத்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
அபிஷன் ஜீவிந்தை போல ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்தை நிகழ்த்திக் காட்டுவதில் பல இளம் இயக்குநர்கள் காரணமானவராக இருந்திருக்கிறார்கள்.

2010-க்கு முன்பு கோலிவுட்டிலிருந்து வந்த பல திரைப்படங்களும் பல மைல்கல்லை தொட்டு அடுத்தடுத்த மேடைகளுக்கும் ஏறியிருக்கிறது.
2010-க்குப் பிறகான தமிழ் சினிமாவில் அப்போது வரை பின்பற்றப்பட்டு வந்த பல விஷயங்களில் புதுமையை பல இளம் இயக்குநர்களும் புகுத்தினார்கள். கதை சொல்லல், திரைக்கதையம்சம், தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் புதுமையை அறிமுகப்படுத்தினார்கள்.
இப்படி புதுமையைக் காட்டி ஆச்சரியப்படுத்திய பலரும் மற்றுமொரு முக்கியமான விஷயத்தையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். ஆம், நடிகர்களை மட்டுமே வைத்து பெரும்பான்மையாக அடையாளப்படுத்தப்பட்ட சினிமாவில் இந்த இளம் இயக்குநர்கள் தங்களை முன்னிறுத்தி ஒரு திரைப்படத்தின் அடையாள முகமாக உருவெடுத்தார்கள்.
இப்படி 2010-க்குப் பிறகு அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களைப் பற்றியும் அவர்களின் தனித்துவமான படைப்புகளையும் இங்கே பார்க்கலாம்.
நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை இயக்குநர்களும் இன்று சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இப்போது 'ரெட்ரோ' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 'பீட்சா', 'ஜிகர்தண்டா' என தொடக்கத்திலேயே தன்னுடைய புதுமையான கதை சொல்லல் மூலமாக முத்திரைப் பதித்தவர் இன்றும் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் முக்கியமான திரைப்படங்களை எடுத்து வருகிறார்கள்.
சிறிய பட்ஜெட் திரைப்படமொன்று நல்ல கதையம்சத்தோடு எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக அது வெற்றியை தொடும் என்பதற்கு கார்த்திக் சுப்புராஜின் 'பீட்சா' திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம்.

அதன் பிறகு இவர் இயக்கிய 'ஜிகர்தண்டா' திரைப்படம் அப்போது வரை வந்திருந்த கேங்ஸ்டர் திரைப்படங்களிலிருந்து சற்றே விலகி புதுமையான பார்முலாவை பின்பற்றியது. அதே போல, 'இறைவி' திரைப்படத்திலும் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை வைத்து புதுமையான கதை சொல்லலை கையாண்டிருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.
திரையில் கதை சொல்லும் புதியதொரு டெம்ப்ளேட்டை அறிமுகப்படுத்தியதில் கார்த்திக் சுப்புராஜுக்கு முக்கியமானதொரு பங்கு இருக்கிறது. இது மட்டுமின்றி, தன்னுடைய 'ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல இளம் இயக்குநர்களையும், நடிகர்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார்.
இதுபோல பலரும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் டார்க் காமெடியை கொண்டு வந்ததில் 'சூது கவ்வும்' திரைப்படத்திற்கு முக்கியமானதொரு பங்கு இருக்கிறது.
நலன் குமாரசாமி இயக்கிய இரண்டு திரைப்படங்களிலும் டார்க் காமெடி டச் இடம்பெற்றிருக்கும். அடுத்ததாக அவர் கார்த்தியை வைத்து இயக்கியிருக்கும் 'வா வாத்தியார்' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
கூடிய விரைவில் வெளியாகவிருக்கும் அத்திரைப்படத்தில் நலன் குமாரசாமியின் ஆஸ்தான டச் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதே போல, 'முண்டாசுப்பட்டி' ராம்குமாரின் திரைப்படங்கள் மீதும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தில் அதுவரை நாம் பார்த்திடாத கிராமம், நாம் பார்த்திடாத விஷயங்கள் போன்றவற்றை காமெடியை கலந்து சொல்லி என்டர்டெயின் செய்திருப்பார் ராம் குமார்.
அதுபோல, 'சைக்கோ' த்ரில்லர் கதைகள் பலவற்றையும் தமிழ் சினிமா பார்த்திருந்தாலும் புதியதொரு நுட்பத்தைக் கையாண்டு 'ராட்சசன்' படத்தில் வெற்றி கண்டிருந்தார் ராம் குமார்.
இப்போது 'சைக்கோ த்ரில்லர்' களத்தை மையப்படுத்தி எந்த திரைப்படம் வந்தாலும் அப்படத்துடன் 'ராட்சசன்' படத்துடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு பென்ச்மார்க் திரைப்படமாக அமைந்திருக்கிறது. அடுத்ததாக மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து தற்போது 'இரண்டு வானம்' படத்தை ராம் குமார் இயக்கி வருகிறார்.
'டைம் டிராவல்' என்ற விஷயத்தை 'இன்று நேற்று நாளை' படத்திற்கு முன்பு வரை நாம் ஹாலிவுட் படங்களில்தான் பெரும்பான்மையாக பார்த்திருப்போம். அழகான டிராமா கதையை டைம் டிராவல் என்ற கான்சப்ட்டை வைத்து ஜனரஞ்சகமான சினிமாவாக எடுத்து ஹிட் கொடுத்தார் ரவிக்குமார்.
இன்று தமிழில் அடுத்தடுத்து வெளியாகும் 'டைம் டிராவல்' திரைப்படங்களுக்கும் முன்மாதிரி 'இன்று நேற்று நாளை' திரைப்படம்தான். இதனை தொடர்ந்து 'அயலான்' திரைப்படத்திற்காக பல வருட உழைப்பை செலுத்தியிருந்தார்.

'எந்திரன்', '2.0' படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமான கிராபிக்ஸை பயன்படுத்தியதில் 'அயலான்' படத்திற்கு முக்கியமானதொரு பங்கு இருக்கிறது.
இவர்களைப் போல 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த எஸ்.யூ. அருண்குமார், மடோன் அஷ்வின், ஶ்ரீ கணேஷ், நித்திலன் சுவாமிநாதன், அஸ்வத் மாரிமுத்து, 'காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கும் படைப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.
இவர்களைதாண்டி இன்னும் பல இயக்குநர்கள் 2010-க்குப் பிறகான தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். பா.இரஞ்சித்தின் வருகைக்கு பிறகு தலித் அரசியல் பேசும் சினிமாவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தரிப்பு, அவர்களுக்கான அரசியல் என முன்பிருந்த பாதையை முழுவதுமாக தகர்த்து மக்களுக்கான களம் அமைத்து அரசியல் பேசினார் பா. இரஞ்சித்.
இப்படியொரு முக்கியமான தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கிறார். இவரைப் போலவே, மாரி செல்வராஜும் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்த, சந்திக்கும் போராட்டங்களை திரையில் பதிவு செய்து வருகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பேசுவதுடன் உவமை கதைசொல்லல் பார்மெட்டும் மாரி செல்வராஜின் அடையாளம்.

'கூழாங்கல்', 'கொட்டுக்காளி' திரைப்படங்களின் மூலம் உலக மேடைகளில் தமிழ் சினிமாவின் அடையாளத்தை பதித்திருக்கிறார் பி.எஸ். வினோத் ராஜ்.
வழக்கமான கமர்சியல் திரைக்கதை அம்சம் இல்லாத படத்தை திரையரங்க வெளியீட்டிற்கு கொண்டு வந்து புதியதொரு விஷயத்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் வினோத் ராஜ்.
மாற்று திரைக்கதை பார்முலாவை அறிமுகப்படுத்தியதிலும், கதையில் சரியான அரசியல் பார்வைக் கொண்ட தத்துவங்களை அமைத்ததிலும் முக்கியமானவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
அப்போது வரை தமிழ் சினிமாவில் பெரிதளவில் பரிச்சயமில்லாத ஹைப்பர்லிங்க் என்ற திரைக்கதை அம்சத்தை 'ஆரண்ய காண்டம்' திரைப்படத்தில் அமைத்து முத்திரை பதித்தார்.
புதுமையான கதை சொல்லல் நுட்பத்தையும், வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியதிலும் தியாகராஜன் குமாரராஜாவுக்கு முக்கியமானதொரு பங்கு இருக்கிறது.
இப்படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை இயக்கினார் குமாரராஜா.

அதிலும் பெரும்பான்மையான திரைப்படங்கள் களமாடாத ஆந்தாலஜி வடிவில் படத்தின் கதையைக் கோர்த்திருப்பார்.
'மார்வெல்', 'டிசி' படங்களில் களமாடிய யுனிவர்ஸ் என்கிற கான்சப்டை ஜனரஞ்சமான சினிமாவில் சேர்த்து ரசிக்கும் வகையில் கோர்த்து மக்களின் பார்வைக்குக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.

அதற்கான பிசினஸும் இப்போது எகிறியிருக்கிறது. மற்றொரு புறம், தன்னுடைய திரைப்படங்களில் உச்ச நட்சத்திரங்களின் ஆக்ஷன் இமேஜ்ஜை அப்படியே வைத்துக் கொண்டு அவர்களுடைய கதாபாத்திர நடத்தைகளில் புதியதொரு தொனியை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் நெல்சன்.
இந்த புதியதொரு தொனியும் ரசிகர்களிடையே நல்லபடியாக க்ளிக் அடித்தது. இந்தப் பட்டியலில் இயக்குநர் ப்ரேம் குமார், அ.வினோத், த.செ.ஞானவேல் ஆகியோருக்கும் முக்கியமானதொரு பங்கு இருக்கிறது.
2010-க்குப் பிறகும் தமிழ் சினிமாவில் பல சீனியர் இயக்குநர்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தாண்டி மேற்கண்ட இயக்குநர்கள் பலரும் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டினார்கள். இந்தப் பட்டியலில் இந்த இயக்குநரின் பெயரும் இடம்பெறலாம் என நீங்கள் நினைக்கும் இயக்குநர் யார்?