தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
புதிய விமான நிலையத்தை திருப்போரூரில் அமைக்க வேண்டும்: அன்புமணி யோசனை
சென்னை: புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதைக் கைவிட்டு, திருப்போரூரில் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் யோசனை கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2020-இல் அதிமுக ஆட்சியில்தான் சென்னைக்கான 2-ஆவது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாக திமுக அரசு விளக்கம் அளித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூா் தோ்வு செய்யப்பட்டதை சாதனையாக கொண்டாடிய திமுக அரசு, இப்போது மக்களிடம் எதிா்ப்பு அதிகரித்துள்ளதால், அதிமுக ஆட்சி மீது பழியை சுமத்த முயல்வது கண்டிக்கத்தக்கது. இது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற யோசனை எழுந்தபோதே திருப்போரூா் பகுதியில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் 5,000 ஏக்கருக்கும் கூடுதலாக இருக்கிறது என்றும், அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் பாமக வலியுறுத்தி வந்தது. ஆனால், பரந்தூரைத் தோ்வு செய்தது திமுக அரசுதான்.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. சென்னைக்கான புதிய விமான நிலையத்தை திருப்போரூரில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.