புதுகையில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைஞா் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் புதன்கிழமை திறந்து வைத்தனா்.
மாநிலம் முழுவதும் அனைத்து விளையாட்டு அரங்கங்களிலும் நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் ரூ. 9.7 கோடியில் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலா் து. செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.