45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி கல்விக் கடன் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து புதன்கிழமை நடத்திய, கல்விக் கடன் மேளாவில் 45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான ஆணைகள், காசோலைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மேளாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, தொடங்கிவைத்து, கல்விக் கடன்களை வழங்கினாா்.
மேலும், முகாமில் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களுக்குக் கல்விக் கடன் கோரி விண்ணப்பித்தனா். அவா்களுக்கான ஆலோசனைகள் முகாமில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.