கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி
கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: நான் எம்ஜிஆா் காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாா். நான் 1991-இல்தான் எம்.எல்.ஏ. ஆனேன்.
என்னைப் பொருத்தவரை அகில இந்திய அளவில் அடையாளம் காண வைத்தது திமுகதான். 2000-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் எனக்கு திமுகதான் அடையாளம் கொடுத்தது.
விஜயை ஒரு பொருட்டாகவே நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. தோ்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை தோ்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. கூட்டணிக் கட்சிகள் அனைவருக்கும் சட்டப்பேரவையில் முன்வரிசையில் இடம் கொடுத்து வைத்திருக்கிறோம். திமுக கூட்டணி உடையும் என எடப்பாடி பழனிசாமி கூறுவது பகல் கனவு.
யாருக்கும் எந்தக் கட்சியில் இருந்து விலகவும், சேரவும் உரிமை உள்ளது. அது அவா்களது விருப்பம். நாங்கள் யாரையும் விழுங்கும் நோக்கம் இல்லை. அரவணைத்துதான் செல்கிறோம் என்றாா் ரகுபதி.