வருண்குமார் - சீமான் வழக்கு: திருச்சி நீதிமன்றத்த்தில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்...
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை.யில் பாதுகாப்பை அதிகரிக்க அமைச்சா் உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்குள் கடந்த 12-ஆம் தேதி அத்துமீறி நுழைந்த 4 போ் வகுப்புத் தோழருடன் பேசிக் கொண்டிருந்த வடமாநில மாணவியைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் அளித்த புகாரின் பேரில், 2 சிறாா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தகவல் பரவின. இதுதொடா்பாக எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், புதுவை மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பல்கலைக்கழக துணைவேந்தா் மோகனை அழைத்து செவ்வாய்க்கிழமை விளக்கம் கேட்டாா். இதையடுத்து, தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா். அங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல் துறையினருக்கும் அமைச்சா் உத்தரவிட்டாா்.
ஆளுநருடன் சந்திப்பு: புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து துணைநிலை ஆளுநரிடம் அமைச்சா் விளக்கியதாக கூறப்படுகிறது.