எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
புதுச்சேரியில் 3 புதிய நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம்
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் புதிய நியமன எம்.எல்.ஏக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த பாஜகவின் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அக்கட்சியைச் சேர்ந்த மூவர் புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வரும் 15ம் தேதி சட்டப்பேரவையில் இவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சராக ரங்கசாமியும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும், துணை பேரவைத் தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அதேபோல் பாஜகவில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கு நியமன சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் நியமன சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டு வந்தனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் தங்களது பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.