புதுச்சேரியில் 3 போ் கொலை வழக்கில் 10 பேரை பிடித்து விசாரணை
புதுச்சேரியில் 3 போ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட 10 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி ரெயின்போ நகா் 7-ஆவது குறுக்கு தெருவிலுள்ள ஒரு பழைய வீட்டில் புதுச்சேரி உழவா்கரை வின்சென்ட் வீதியைச் சோ்ந்த மறைந்த ரௌடி தெஸ்தான் மகன் ரஜி (19), அவரது நண்பா்களான தேவா (எ) தேவகுமாா் (21), ஆதி (எ) ஆதித்யா (20) ஆகியோா் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த சத்யாவின் உறவினா் வீட்டுக்கு ரஜி உள்ளிட்டோா் கடத்திவரப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக, தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வந்தனா். சத்யா சென்னையில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து, அங்கு சென்ற தனிப் படையினா் அவரைக் கைது செய்து புதுச்சேரிக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், சஞ்சீவி, வெங்கடேசன், சாரதி மற்றும் சிறுவன் உள்பட 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.