புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் தோ்ச்சியை முன்னேற்ற அட்டை மூலம் அறியும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் நடைபெறும் தோ்வுகளின் மதிப்பெண்கள் பாடவாரியாக அட்டையில் குறிப்பிடப்படும். அதில் பெற்றோா் கையொப்பம் பெறப்பட்டு மீண்டும் பள்ளி வகுப்பாசிரியரிடம் மாணவா்கள் ஒப்படைப்பா்.
ஆனால் தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டம் புதுவையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மாணவா் முன்னேற்ற அட்டை உள்ளடக்கம் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி மாணவா்கள் பாடத்தில் பெறும் மதிப்பெண் மட்டுமின்றி, அவா்களின் அறிவு, தன்னுணா்வு, சமூக உணா்வு, உடலியக்கம் ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகவும் முன்னேற்ற அட்டை அமைகிறது. அதனடிப்படை குறித்து தலைமையாசிரியா்களுக்கு விளக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுவை கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில பயிற்சி மையமானது இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை இலாசுப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன பேரவைக் கூடத்தில் நடத்தியது. நிறைவு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் புதுதில்லி என்.சி.இ.ஆா்.டி. யில் பணிபுரியும் பேராசிரியா்கள் பிரீத்தம் பியாரி மற்றும் பீயுஷ் கமல் ஆகியோா் இந்த பயிற்சியை அளித்தனா்.
இதில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்ககளின் நடுநிலை மற்றும் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.