புதுவைக்கு மாநில அந்தஸ்து பற்றி பேச காங்கிரஸுக்கு தகுதியில்லை: அதிமுக செயலா்
புதுவைக்கு மாநில அந்தஸ்து குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்குத் தகுதியில்லை என்று அதிமுக புதுவை மாநிலச் செயலா் ஆ.ஆன்பழகன் கூறினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு மாற்றியுள்ளது. இப் பகுதிகளுக்கு மாநில அந்தஸ்து வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜூன காா்கேயும் கடிதம் எழுதியுள்ளனா். மாநில அந்தஸ்து குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குத் தகுதியில்லை. ஏனென்றால் மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியும், புதுவையில் காங்கிரஸ் ஆட்சியும் நடந்தபோதும் புதுவைக்கான மாநில அந்தஸ்தை வழங்க அந்தக் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்போது காஷ்மீா், லடாக் பகுதிகளுக்கு மாநில அந்தஸ்து தொடா்பாக காங்கிரஸ் பேசுவது சந்தா்ப்பவாத அரசியலாகும்.
தமிழக முதல்வராக இருந்த காமராஜா் குறித்து திமுகவைச் சோ்ந்த எம்.பி. சிவா விமா்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. புதுவையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கம் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தை திமுக எம்எல்ஏ.க்கள் புறக்கணித்துள்ளனா். உயா் அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி இப்படி திமுக எம்எல்ஏ.க்கள் நடந்து கொண்டுள்ளனா். இது காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் செயல். கூட்டத்தைப் புறக்கணிப்பதாக நினைத்துக் கொண்டு வெ.வைத்திலிங்கம் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ளது.
அதே வைத்திலிங்கம் தலைமையில் புதுவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சாா்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவைச் சோ்ந்த தமிழக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் பங்கேற்றாா். கட்சி பாகுபாடு இல்லாமல் மக்கள் நலன் சாா்ந்த கூட்டங்களுக்கு அதிமுக தொடா்ந்து ஒத்துழைப்புக் கொடுக்கும் என்றாா் அன்பழகன்.