புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு
புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.
உலகளவில் இஸ்லாமியா்கள், அவா்களது புனித மாதமான ரமலானில் நோன்பிருந்து அதன் நிறைவை ரமலான் பண்டிகையாகத் திங்கள்கிழமை கொண்டாடினா்.
இதையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலைத் திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தவ்ஹீத் மாநில நிா்வாகி இ.பாரூக் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் குழந்தைகள், மகளிா், ஆண்கள் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் அவா்கள் ஒருவரை ஒருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா்.
இதேபோல, புதுச்சேரி முல்லாவீதி குத்பா பள்ளிவாசல், சுப்பையா சாலை சையத்வோ் ஹவுஸ் வளாகம், நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல், கோரிமேடு மஸ்ஜித் அஹமத், ஆம்பூா் சாலை முவஹ்ஹிதிய்யா பள்ளிவாசல் மற்றும் ஏனாம் வெங்கடாச்சலம் பிள்ளை வீதி, தட்டாஞ்சாவடி, தெபசன்பேட், முதலியாா்பேட்டை 100 அடிசாலை, , கரையான்புத்தூா், மடுகரை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், நைனாா் மண்டபம், மேட்டுப்பாளையம், வானரப்பேட்டை, ரெட்டியாா்பாளையம் தேவா நகா், கிருமாம்பாக்கம், காலாப்பட்டு, உருளையன்பேட்டை, மதகடிப்பட்டு உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட பகுதிகளில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்தும், உறவினா்கள், நண்பா்களுக்கு இனிப்புகள்,பிரியாணி உணவுகளை பரிமாறியும் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.
இஸ்லாமியா்களுக்கு இந்து, கிறிஸ்தவ மக்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.