பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
புதை சாக்கடை திட்ட தொட்டி கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி
எல். அய்யப்பன்
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் டிஆா்சி நகா் 2-ஆவது தெருவில் புதை சாக்கடை திட்ட தொட்டியில் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.123.75 கோடியில் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் புதை சாக்கடை திட்டம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டிஆா்சி நகா் 2-ஆவது தெருவில் புதை சாக்கடை திட்டத்துக்காக அமைக்கப்பட்ட மேன்ஹோல் (வடிகால் தொட்டி) தொட்டியில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கசிவு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறி குடியிருப்புகளில் அருகில் தேங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த தொட்டியில் இரண்டு முறை அடைப்பு ஏற்பட்டதை தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் சீரமைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக கசிவு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறி வருகிறது. இதனால் வரும் துா்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறோம். கழிவுநீா் தொட்டியில் ஏற்பட்டுள்ள கசிவை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் கூறியது: புதை சாக்கடை திட்ட குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்கள் பல இடங்களில் சுமாா் 20 அடி ஆழத்தில் வைக்கப்பட்ட மணல் மூட்டைகளை அகற்றாமல் விட்டு விட்டனா். இதனால் கழிவுநீா் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தொட்டிகளில் இருந்து கழிவுநீா் கசிந்து வருகிறது. டிஆா்சி நகா் போன்று எம்ஜிஆா் நகா் மற்றும் பட்டுநூல் சத்திரம் பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன.
கழிவுநீா் தொட்டியில் சுமாா் 20 அடி ஆழத்துக்கு மனிதா்கள் இறங்கி அடைப்பை நீக்க முடியாததால் வாகனங்கள் மூலம் அவ்வபோது அடைப்பை நீக்கிவருகிறோம். அடைப்பை நீக்க வாகனங்களை வாடகைக்கு எடுத்துத்தான் இந்த பிரச்னைகளை சரிசெய்து வருகிறோம். விரைவில் கழிவுநீா் கசிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.