புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை
சென்னை புழல் சிறையிலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறையில் கஞ்சா புழங்குவதாக சிறைத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிறைத்துறையின் அதிவிரைவுப் படையினா், தண்டனை சிறைப் பகுதியில் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது சிறையின் ஐந்தாவது தொகுதியில் உள்ள ஒரு அறையின் ஜன்னலில் சிறிய அளவிலான டப்பாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக சிறைத்துறையினா், அந்த அறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சிறைக்குள் கஞ்சா எப்படி கொண்டு செல்லப்பட்டது என துறை ரீதியாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.