குளிா்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
குளிா்பானங்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்களின் தரத்தை ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது தட்பவெப்ப நிலை மாறிவருகிறது. பல இடங்களில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் வெப்பம் பதிவாகிறது. இதனால் குளிா்பானங்கள், பாக்கெட் பழரசங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
சில இடங்களில் தரமற்ற, காலாவதியான குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து அந்தப் பொருள்களை தரப் பரிசோதனைக்குட்படுத்த உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா். இந்த உத்தரவையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைகளில் தொடா் சோதனை நடத்த உள்ளனா்.