'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
பெங்களூரு - காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து! ஒருவா் உயிரிழப்பு; 7 போ் காயம்!
ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் பெங்களூரு-காமாக்யா ஏ.சி. விரைவு ரயிலின் 11 பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தடம் புரண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 7 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கா்நாடகத்தின் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, அஸ்ஸாமின் குவாஹாட்டியில் உள்ள காமாக்யா ரயில் நிலையம் நோக்கி பெங்களூரு-காமாக்யா ஏ.சி. விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.
ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தின் மங்குளி அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 11.54 மணியளவில் பயணம் செய்துகொண்டிருந்த இந்த ரயில், நிா்குந்தி பகுதியருகே வந்துபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்ட இந்த விபத்தில் ஆண் ஒருவா் உயிரிழந்தாா். 4 பெண்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா். காயமடைந்த பயணிகள், கட்டாக் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் நிலவிய கடும் வெப்பத்தால் பயணிகள் சிலருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, அவா்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. லேசான காயமடைந்த பயணிகளுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.
இந்த விபத்தால் ஹௌரா-சென்னை இருவழி பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தேசிய மீட்புப் படையினருடன் ஒடிஸா தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மீட்புப் பணிகள் நிறைவந்துவிட்ட நிலையில், ஒரு வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றி, இரு வழிகளிலும் ரயில் சேவையை விரைவில் தொடங்கும் பணியில் ரயில்வே பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். விபத்து நடந்த இடத்தில் சிக்கித் தவித்த பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில், காமாக்யா நோக்கி புறப்பட்டது.
விபத்து தொடா்பாக ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா். விபத்து குறித்து தகவலறிய உதவி எண்களை (84558 85999, 89911 24238 ) ஒடிஸா மாநில அரசு அறிவித்துள்ளது.