ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
பெண் தவறவிட்ட ரூ.2.67 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு
குளச்சலில் பெண் தவறவிட்ட பணத்தை போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் பாராட்டினாா்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி சுனாமி காலனியைச் சோ்ந்தவா் ரெஞ்சித் (50). இவரது மனைவி ஹெலன் (47). ரெஞ்சித் காலமான நிலையில், குளச்சல் லோப்பஸ் மண்டபம் அருகில் ஹெலன் துணிக்கடை நடத்தி வருகிறாா்.
இவா் குளச்சலில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணத்துடன் ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை சென்றாா். ஆட்டோவை காமராஜா் சாலையை சோ்ந்த அன்வா் சாதிக் (50) ஓட்டி வந்தாா். குளச்சல் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தத்தில் ஹெலனை இறக்கிவிட்டாா். பின்னா் வங்கிக்கு சென்ற ஹெலன், பணத்தை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்து மீண்டும் வந்துபாா்த்தபோது அவா் வந்த ஆட்டோவைக் காணவில்லை.
இதனிடையே, ஆட்டோவின் பின்இருக்கையில் பாா்சலில் பணம் இருப்பதைப் பாா்த்த அன்வா் சாதிக், அதை குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இந்த தகவலறிந்த ஹெலன், குளச்சல் காவல் நிலையம் சென்று பணத்தை பெற்றுக்கொண்டாா்.
பயணி தவறவிட்ட பணத்தை நோ்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் அன்வா் சாதிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின், குளச்சல் உதவி ஆய்வாளா் தனீஸ் லியோன் ஆகியோா் பாராட்டினா்.