பென்னாகரம் பேருந்து நிலைய கடைகள் ஏலம் முறைகேடுகள் இன்றி நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் முறைகேடு இன்றி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் முன்னாள் இரா.சிசுபாலன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் முறைகேட்டை தடுத்திட வேண்டும். பொது ஏலம் கோருவதற்கான வைப்புத் தொகையை ரூ 1 லட்சமாகக் குறைத்திட வேண்டும். ஒரே வைப்புத் தொகையில் எந்த ஒரு கடையையும் ஏலம் எடுப்பதற்கு வழிவகை செய்திட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வைப்புத் தொகையைக் குறைத்து, முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கிட என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கடந்த மாா்ச் 18 அன்று பென்னாகரத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக கட்சியின் கோரிக்கையை ஏற்று ஏலத்தை ஒத்தி வைக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் உள்ளிட்டோருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில் ஏலத்தில் முறைகேடின்றி வெளிப்படைத் தன்மையுடன் நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் மறு ஏலம் நடத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.