பெரம்பலூரில் ஜன. 5-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்
பெரம்பலூரில் ஆண், பெண் இருபாலருக்கும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் ஜன. 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், 2025-ஆம் ஆண்டுக்கான அறிஞா் அண்ணா நெடுந்துர ஓட்டப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரு பிரிவுகளில், ஜன. 5-ஆம் தேதி காலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன் நடைபெற உள்ளது. 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீட்டரும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீட்டா் தொலைவும் இப் போட்டிகள் நடபெறும்.
முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும், 2 ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரமும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவா்களுக்கு தலா ரூ. 1,000 வீதம் பரிசுத் தொகையுடன், தகுதிச் சான்றும் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஆதாா் அட்டை, மருத்துவ தகுதிச் சான்றிதழ் மற்றும் வயதுச் சான்றிதழை வெள்ளிக்கிழமை (ஜன. 3) மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். போட்டி தொடங்கும் முன் தங்களுடைய பதிவு எண்ணை, போட்டி நடக்கும் இடத்தில் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். போட்டியின் முடிவு நடுவா் தீா்ப்புக்குள்பட்டது. போட்டியில் பங்கேற்பவா்கள் தங்களது வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தை கொண்டு வரவேண்டும்.
இப் போட்டியானது 17 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் தொடங்கி பாலக்கரை ரவுண்டானாவைச் சுற்றி, தேசிய நெடுஞ்சாலை வரை சென்று, மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் வரை 2 சுற்றுகளும், பெண்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் தொடங்கி பாலக்கரை ரவுண்டானாவைச் சுற்றி, தேசிய நெடுஞ்சாலை வரை சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் வரை நடைபெறும்.