திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
பெருந்தமிழன் பூதத்தாழ்வார்
தமிழ்நாட்டில் 1,300 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் சிறப்பை எடுத்துக் கூறும் கலைக்கூடமாக மாமல்லபுரம் விளங்குகிறது. குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் ரதங்கள், கடற்கரைக் கோயில், சிற்பங்கள் போன்றவை சிறந்த அடையாளமாக இன்றும் திகழ்கின்றன.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தின் நடுவே வழிபாடு சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. தரையில் சயனக் கோலத்தில் பெருமாள் காட்சி அளித்ததால் "தலசயன பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.
நிலப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் "நிலமங்கை தாயார்" எழுந்தருளியுள்ளார். வழிபாட்டில் இருக்கும் உற்சவமூர்த்தி "உலகுய்ய நின்ற பெருமாள்" எனப் போற்றப்படுகின்றார். ஆழ்வார்களின் பாசுரங்களால் மங்களாசாசனம் பெற்ற சிறப்புடன் 63}ஆவது திவ்ய தேசமாக விளங்குகிறது. பூதத்தாழ்வார் ஒரு பாசுரமும், திருமங்கை ஆழ்வார் 26 பாசுரங்களையும் அருளியுள்ளனர்.
பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூன்று ஆழ்வார்களுள் பூதத்தாழ்வார் அவதரித்த தலம் இது என்ற பெருமை உடையது. தலசயனப் பெருமாள் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் குருக்கத்தி மலரில் ஐப்பசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் இவர் அவதரித்தார்.
திருமாலின் கரங்களில் அலங்கரிக்கும் ஐந்து ஆயுதங்களில் "கெüமோதகி' எனப்படும் கதாயுதத்தின் அம்சமாகத் தோன்றியவர் என ஆழ்வார்களின் வரலாறு கூறுகிறது.
கோயிலின் எதிரில் உள்ள நந்தவனத்தில் பூதத்தாழ்வார் வரலாற்றுடன் தொடர்புடைய திருக்குளமும் கிணறும் அமைந்திருக்கின்றன. இவர் அருகில் பூதத்தாழ்வாரின் சிற்பத் திருமேனி வழிபடப்பெறுகிறது. கோயிலில் திருச்சுற்றில் தனிச் சந்நிதியில் பூதத்தாழ்வார் வியாக்யான முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதையும் காணலாம்.
பூதத்தாழனர் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதியில்
"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக,
"இன்பு உருகு சிந்தை இடுதிரியா } நண்பு உருகி
"ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் } நாரணற்கு
"ஞானத் தமிழ் புரிந்த நான்'
எனப் போற்றுவதைக் காணலாம். (பாசுரம் எண்: 2182)
மேலும் ஒரு பாசுரத்தில்,
"தமர்உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தன்கால்
"தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை
"தமர் உள்ளும், மாமல்லை, கோவல் மதிள்
"குடந்தை என்பரே ஏவல்ல எந்தைக்கு கிடம்' (பாசுரம் 2251)
"திருமால் மிகவும் விரும்பிய தனிச்சிறப்புடைய மாமல்லை' என்று இத்தலத்தின் சிறப்பைப் போற்றுகின்றார்.
பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில்
"யானேதவம் செய்தேன் } ஏழ்பிறப்பும் - எப்பொழுதும்
"யானே தவம் உடையேன் எம்பெருமான் } யானே
இருந்தமிழ் நல் மாலை இணை } அடிக்கே சொன்னேன்
"பெருந்தமிழன் நல்லேன் பெரிது' (பாசுரம் 2255)
என்று தனது தமிழ்ப்பற்றை எடுத்துரைப்பதைக் காணலாம்.
மேலும், நம்மாழ்வார் "பாலேய் தமிழ் இசைக்காரர்' எனவும், திருமங்கையாழ்வார் "செந்தமிழ் பாடுவார்' எனவும், பூதத்தாழ்வாரை போற்றுகின்றனர். "எப்புவியும் பேசு புகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் } தேசுடனே தோன்று சிறப்பால்' என்று மணவாள மாமுனிகளும் புகழ்வதைக் காணலாம்.
இத்தகைய புகழ்பெற்ற பூதத்தாழ்வார் அவதரித்த ஜப்பசி மாதத்தில் மாமல்லை தலசயன பெருமாள் கோயிலில் திருஅவதார உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன சொல் மாலை ஏத்தித் தொழுதேன் நல்மாலை ஏத்தி நவின்று' என்று தமிழ்ப் பற்றுடன் } ஞானத்தமிழிலே திருமாலைப் போற்றும் பூதத்தாழ்வார் அவதாரத் திருவிழா சிறப்புற நடைபெறுகிறது. நவம்பர் 9}இல் ரத்னாங்கி அணிந்து சேவை சாதிக்கும் வைபவம் நடைபெறுகிறது.
கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (பணி நிறைவு).